Wednesday, July 26, 2017

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்நேற்று வரை ராதிகா நாடகத்தை, 
எதற்காகவும்  விட்டுக்கொடுக்காத என் தாய், 
தொலைக்காட்சி பெட்டி இருக்கின்ற ஒரே காரணத்திற்காக,
சானல்களை ஓட விடும் தந்தை,
அதிகாலை கல்லூரி பேருந்தை பிடிக்க,
ஒன்பது மணிக்கே படுக்கைக்கு செல்லும் என் தங்கை, 
ஓயாமல் ஒளிபரப்பாகும் செய்தி தொகுப்புகளை, 
மட்டுமே காணும் என் மாமா 
என்று அனைவரும் இன்று பிக் பாஸ் பார்வையாளர்கள். அத்தகைய ஆளுமையை கொண்ட பிக் பாஸ் -ஐ  தலைவணங்குகிறேன். மக்களின் மனதை படித்து, தன் பிடியில் தக்க வைக்க அறிந்தவன் எவனாயினும் அவன் பாராட்டுக்குரியவனே.

பிக் பாஸ், இது சித்திரக்கிப்பட்ட தொடர், சுத்திகரிக்கப்பட்ட உண்மை, ஏமாற்று யுக்தி, எழுதி வைத்து நடிப்பது, முட்டாள்தனம் என்று ஏகப்பட்ட கருத்துக்கள் உலா வரினும் இதை பார்க்கதவர் யாரும் இலர்.

முகநூல் தொடங்கி முட்டு சந்து வரை எங்கும் எதிலும் பிக் பாஸ். தெருவோர சிறார்கள் மட்டைப்பந்து குழு பிரிப்பது போல் ஆளுக்கொரு முகநூல் குழு அமைத்து விருப்புகளையும், வெறுப்புகளையும், அதிருப்திகளையும், ஆதரவுகளையும் அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலுள்ள கதாபாத்திரங்களை வெறுக்கவும் விரும்பவும் செய்யும் நன் மக்கள் என்று உணர போகிறார்களால் நம் அனைவரும் அங்குள்ள அத்துணை பேரின் குணாதிசயங்களை ஒருங்கே பெற்றவர்கள் என்பதை?

காயத்ரி கோபப்படுகிறார்,  சக்திக்கு பேச தெரியவில்லை, சினேகன் புறம்பேசுகிறார், ஓவியா உண்மையாய் இருக்கிறார், ஜூலி முதுகில் குத்துகிறாள், கஞ்சா கருப்பு அடிக்க போகிறார் இன்னும் பல.

நம்மில் எத்தனை பேர் நம்மை மதிக்காதவர்களிடம் மரியாதையை காட்டுகிறோம்?
எத்தனை பேர் நடுநிலையாய் நம் வாழ்க்கையில் முடிவுகள் எடுக்கிறோம்?
எத்தனை பேர் நம் மேலாளர்கள் பற்றி குறை கூறாமல் இருக்கிறோம்?
எத்தனை பேர் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர்?
எத்தனை பேர் பிடிக்காதவரிடம் அன்பு காட்டுகிறோம்?

ஒரு நிகழ்ச்சியில் நமக்கு பிடித்த இன்று வரை நேரில் கூட காணாத ஒருவரை ஒதுக்கி வைத்தார் என்பதற்காக அந்த நபரின் குடும்ப வாழ்க்கையில் நேர்ந்த அவலங்களை வெளியிட்டு வெறிதீர்க்கும் நாம் எந்த வகையில் அவரை விட சிறந்தவர்?

தொலைக்காட்சியில் காணும் ஒரு நிகழ்ச்சியின் பொருட்டு ஒரு பெண்ணின் நடத்தையை இழிவாய் நினைக்கும் நம்மில் எதனை பேருக்கு ஜூலியை பற்றி பேச அருகதை உள்ளது?

"மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொற்குடம்" என்ற வாசகத்திற்கு தக, ஓவியா தவிர யார் என்ன செய்தலும் குற்றம். ஓவியா தவறே செய்தலும் அதை நியாயப்படுத்தும் நாம் நடுநிலையை பற்றி பேச தகுதியற்றவர்கள்.

உங்கள் வீட்டில் ஒருவர் நீங்கள் பேசும் போது மதிக்காமல் எழுந்து சென்றாலோ, அவர்களுக்கு பிடித்த நேரத்தில் மட்டும் சிரித்து, வேண்டிய நேரத்தில் உழைத்து, என்னை கேட்க நீ யார் என்று வாழ்ந்தால் அவர்களிடம் அன்பு தோன்றுமெனில் நீங்கள் நிச்சயம் மாமனிதர் தாம்.

இது குறிப்பிட்ட ஒருவரை குறை கூறுவதற்காக அல்ல. திரையில் ஏற்று கொள்ளும் நாம் நிஜ வாழ்க்கையிலும் இதை கடைபிடித்தால் நன்று என்ற ஆதங்கம் மட்டுமே. இந்நிகழ்ச்சி, உங்களை சுயசோதனை செய்துகொள்ள கிடைத்த உந்துதலாய் கொள்ளுங்கள்.

"குற்றம் பார்க்கின் சுற்றம் இலர்"
 ஆம், குற்றம் குறை இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை. அறிந்தோ அறியாமலோ நாம் அனைவரும் ஏதேனும் தவறிழைத்து கொண்டு தான் இருக்கிறோம். இங்குள்ள எத்தனை பேருக்கு உங்கள் வாழ்க்கையை நொடி விடாமல் படம் பிடித்து காட்ட சொல்ல தைரியம் உண்டு? அப்படி காட்டினால் எத்தனை பேருக்கும் இன்றிருக்கும் உறவுகள் எந்தவொரு மாற்றமும் இன்றி சுமூகமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு?

நாம்  மனிதர்கள்.! நன்மையையும், தீமையும் ஒருங்கே பெற்று தேவைக்கேற்றார்போல் நடித்து, சில சமயம் மறைத்து பல சமயம் மறந்து, இன்று அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோமா என்பதை உணராது ஓடிக்கொண்டிருக்கும் ஓர் உயிரினம். இதில் மற்றவர்களின் குறை மறந்து, இருப்பதில் நிறைவடைந்து, சேர்ப்பதில் நிலை அறிந்து வாழ்ந்தால் வாழக்கை வசந்தம் தான்.

பிக் பாஸ் அல்ல எந்த நிகழ்ச்சியாயினும் அதனை ஒரு பொழுதுபோக்காக மட்டும் கருதி, அதிலுள்ள நன்மையை ஏற்று, தீமையை திருத்தி வாழ்ந்தால் நாம் அனைவரும் பிக் பாஸ் தான்.

பின்குறிப்பு: ஓவியா ரசிகர்களே பாய வேண்டாம் நானும் ஓவியாவின் காலை நடனத்துக்கு ரசிகை தான்.