Tuesday, February 21, 2017

ஹைட்ரோகார்பன் திட்டம் - மாறுவேடத்தில் ஊடுருவி இருக்கும் அன்றைய மீத்தேன் திட்டம்..!!

வறண்ட பூமியாய் மாறும் தமிழகம்..!


சென்ற ஆண்டு வரை மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விடயம் மீத்தேன் எரிவாயு திட்டம்..!
பாமரன் தொடங்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய திட்டம்;
மக்களின் நலன் கருதாது மத்திய அரசால் திணிக்கப்பட்ட திட்டம்;
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வீழ்த்தும் திட்டம்;
உச்சநீதிமன்ற உத்தரவோடு உதரப்பட்ட திட்டம்;

                       இன்றைய தமிழகத்தில்,  நொடிக்கொரு முக்கிய செய்தியும், மணிக்கொரு முதலமைச்சரும் மாறி வரும் அரசியல் சூழ்நிலையில் நம்மை திசைதிருப்பி மாறுவேடத்தில் புறவாசல் வழியே ஊடுருவி இருக்கும் அன்றைய மீத்தேன் திட்டம் தான் இன்றைய ஹைட்ரோகார்பன் திட்டம்..!

                       புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரின் நடுவே அமைந்துள்ள ஒரு கிராமம் தான் நெடுவாசல். கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ONGC (Oil & Natural Gas Corporation) எனும் இந்திய பன்னாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் பூமிக்கடியில் நீரகக் கடிமம் மற்றும் கட்சா எண்ணெய் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்குள்ள நிலப்பகுதியை கைப்பற்றிய அந்நிறுவனம் நான்காயிரம் அடி ஆழத்திற்கு இரு இடங்களில் ஆழ்துளை கிணறு தோண்டி ஆய்வு நடத்தி வந்தது.

                       இதையடுத்து நெடுவாசல் மக்களிடம் பேசி கிட்டத்தட்ட முப்பத்தியொரு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்ட விளைநிலங்கள் விலைபேசப்பட்டன. இவ்விடங்கள் மட்டுமன்றி, தஞ்சாவூர் காவிரி டெல்டா பகுதிகளிலும் மீத்தேன் இருப்பதாக கண்டறியப்பட்டு அங்குள்ள விளைநிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் விளைவுகளை அறிந்த மக்கள் நிலங்களை விற்க மறுத்தனர். தமிழக அரசும் இத்திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து நிரந்தர தடை அறிவித்தது.

                       இதனையடுத்து, மீத்தேன் திட்டம் தற்போது மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஹைட்ரோகார்பன் திட்டம் எனும் பெயரில் மத்திய அரசால் ஒரு தனியார் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கபட்டுள்ளது.

                       இத்திட்டத்திற்கு பலதரப்பட்ட மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இச்சமயத்தில் இத்திட்டத்தின் பின்விளைவுகளை பற்றி  அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

                       பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சிதைந்த உயிர்ம படிமங்களிலிருந்து வெளியேறும் கரிப்படிவு (கார்பன்) மற்றும் ஹைட்ரோஜென் இணைந்து நீரகக் கடிமமாக மாறி பூமியின் ஆழத்தில் சேர்கின்றது. இவை இயற்க்கை எரிபொருளாக பயன்படும். இதுவே இத்திட்டத்தின் நன்மையாகும். இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் இது ஒன்று மட்டுமே இதன் நன்மையாகும்.

                      இத்தகு நீராக கடிமங்கள் பல நாடுகளில் கண்டறியப்பட்டு, உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் இவை கடல் சார்ந்த நிலங்களிலும், தரிசு நிலங்களில் மட்டுமே காணப்படுகின்றன. நம் தமிழகத்தை பொறுத்தவரை விளைநிலங்களுக்கு அடியில் இவை கண்டறியப்பட்டுள்ளதால், இத்திட்டம்  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, விவசாயத்தை முற்றிலும் அழிக்கும்.

                      நீராக கடிமம் பூமிக்கு அடியில் ஐயாயிரம் அடி ஆழத்தில் படிந்துள்ளது. இதனை எடுக்கவேண்டுமெனில், ஆழ்துளையிட்டு நிலத்தடி நீரை வெளியேற்றுவர். பின் திரவத்தை பாய்ச்சி பூமிக்கடியில் இருக்கும் சிறு பாறைகளை வெளியேற்றுவர். இதனால் நிலத்தடி நீர் குறைந்து, கடல்நீர் உட்புகும், நிலம் உயிரிழக்கும்.

                     இத்திட்டத்தால் பாதிக்கப்படுவோர் ஐயாயிரம் விவசாயிகள் மட்டுமே என நாம் நினைத்தால், நம்மை விட முட்டாள்கள் யாருமில்லை. இன்று நெடுவாசலில் தொடங்கும் இந்த திட்டம், நாளை காரைக்கால், தஞ்சாவூர் என்று தொடர்ந்துகொண்டே இருக்கும். இதனால் விவசாயம், விவசாயிகள் அழிவதோடு நாட்டில் பஞ்சம் தோன்றி வறட்சி பூமியாய் மாறும் தமிழகம்.

                     "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்",
என்று பழைய பட வசனம் ஒன்று உள்ளது. நமது மத்திய சர்க்காருக்கு அத்தகைய சூளுரை கொண்டதோ என்னவோ? பல்லவனும், பாண்டியனும், சேரனும், சோழனும் ஆண்ட, ஆனை கொண்டு போரடித்து வாழ்ந்த, நம் செந்தமிழ் மண் இன்று (போர்) ஆழ்துளைக்கிணறு வெட்டி அகாலமாய் அழிவதா?

தமிழா,
தாமிரபரணி இழந்தாய்,
தாய்மொழி சிறப்பிழந்தாய்,
தமிழினங்கொண்ட செருகிழந்தாய்,
தன்னிலை இழந்தாய்,
இன்று, மண்ணின் மானமாம் நம் விவசாயத்தையும் இழப்பாயோ?
உணவின்றி எதை உண்பாய்?
உயிரோடு வாழ்தல் வாழ்வல்ல,
உணர்வோடு வாழ்வாய்,
நம்மை தாங்கும் நம் தாய் மண்ணை காப்பாய்..!!
உணர்ந்து, எழுந்து, சேர்ந்து வா..!!

No comments:

Post a Comment