வெறுப்பு ..!!!
விரிந்த சாலையில் குறுகிய வயல்வெளி,
பெருகிய வாகனங்களால் உயிரிழந்தக் காற்று,
பல்கிய பெருநகரங்களால் பயனிழந்த பண்பு,
வலிந்த தொழிற்சாலைகளால் மலிந்த ஓய்வு நேரம்,
சிறந்த தொழில்நுட்பங்களால் மறைந்த மரபுகள்,
அடுக்குமாடி குடியிருப்புகளால் அழிந்து போன நிலத்தடிநீர்,
அவசர உலகத்தில் அழிந்துபோன அன்பு,
கைப்பேசி யுகத்தில் களங்கமடைந்த காதல்,
குளிர்பான மோகத்தில் குலைந்துவிட்ட குடல்கள்,
மாயலோகத்தில் மறைந்துவிட்ட மனிதாபிமானம்,
கேட்க ஆளின்றி பெருகிவரும் கேளிக்கை,
கேட்கும்போதெல்லாம் கிடைக்கும் சுகபோகத்தில்,
கேட்கவே மறந்துவிட்டோம் நம் தமிழர் மரபுகளை!
இன்றைய விருப்பங்கள் ஏனோ,
எனக்கு மட்டும் வெறுப்பைத் தர,
நாள்தோறும் என் மனம் அடையத் தவிப்பதோ,
தெளிந்த நீரோடையின் குளிர்ந்த நீர்,
நெளிந்தப் பாதையில் குலம்புச் சத்தம்,
பரந்த வயல்வெளியின் வரப்புப் பாதை,
செழித்த நிலத்தில் தழைத்த செங்கதிர்,
திறந்தவெளி திண்ணையில் வானவேடிக்கை,
எறும்புக்கும் இரைபோடும் வாசற்க் கோலங்கள்,
இளநீர், பதநீர், மோர்நீர் போன்ற
இயற்க்கை பானத்தை பருகிடும் இன்பம்,
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவற்றின்
பொருளறிந்த பெண்டிர்,
வீரம், ஆண்மை, மதியூகத்தில்,
மகிமைபெற்ற ஆடவர்,
அளவறிந்து ஆசைப் பகிரும் அழகியக் காதல்,
அன்னை மடியில் தந்தை ஊட்ட
உணவு உண்ணும் சுகம்,
ஆலமரத்தடியில் பயிலும் பாக்கியம்,
வாசற்படி வேம்பின் குளிர்ந்தக் காற்று,
மரபறிந்து, மொழியறிந்து,
உறவறிந்து, உண்மையறிந்து,
செலவறிந்து, செம்மையறிந்து,
வழியறிந்து, வாழ்வறிந்து,
மதியறிந்து, மாற்றமறிந்து,
பண்பறிந்து, பாசமறிந்து,
காதலறிந்து, காமமறிந்து,
வாழ்க்கை இன்னதென கற்றறிந்து,
தேவை இன்னதென பகுத்தறிந்து,
நம் தமிழர் மரபை தானுணர்ந்து,
இனியேனும் நம் தவறை நாமறிந்து,
நம் குடியை வளமாக்கும் வழியறிந்து,
ஜாதி, மத, பேதமின்றி நாமிணைந்து,
செயல்படுவோம் எந்நாளும் மனமுவந்து!!!!
Comments
Post a Comment