கடவூர்...!!!
அதிகாலை நான்கு மணிக்கே பரபரப்புடன் இயங்க துவங்கிவிட்டோம். ஒருவாறு கடவூர் சென்றடைய மணி பத்தாகிவிட்டது. அது ஒரு மலையை குடைந்து உருவாக்கிய அழகிய கிராமம் என்று தான் சொல்ல வேண்டும். பெயருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய் பம்பு செட்டுகள். நடக்கும் போதே அத்துனை அழகையும் ஆழ்மனதில் பதித்து விடலாம். அத்தகைய கிராமத்தில் எங்குமே கண்டிராத பழங்காலத்துக் குடில்கள். தேர்ந்தெடுத்த சில வல்லுனர்களால் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
உள்ளே குடிலுக்குள் நுழையும் போதே நம் முன் வைக்கின்றனர் கம்பங்கூழ்தனை. நகரத்தில் வாழ்ந்த எனக்கு அனைத்தும் புதிதாக இருந்தது. வாகனமில்லாத சாலை, சாணம் கொண்டு மொழுகிய தரை. கூரை வேய்ந்த குடில், பரிமாறிய உணவு, மற்றும் என் நெருங்கிய நண்பர்களுடன் சில நாட்கள்.
காலை 11 மணிக்கு,
முதல் வகுப்பு ஆரம்பமானது. கிட்டதட்ட 15 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நபர் வெகுத் தெளிவாக பண்ணை அமைக்கும் முறை பற்றி விளக்கினார். கிட்டதட்ட 10 ஆண்டுகளாக அவரது வயலுக்கு அவர் நீர் பாய்ச்சியதே இல்லையாம். இருப்பினும் பச்சை பசேலென காட்சி அளிக்கின்றது அவரது தோட்டம்.
நீர் இல்லாமல் விவசாயமா..? அதுவும் நல்ல பலனும் தருகின்றதா..? கேட்கும்போதே தலை சற்று கிறுகிறுக்கத்தான் செய்தது. இந்த காலத்தில் பாத்தி கட்டி, உரத்தை கொட்டி, பூச்சிக்கொல்லிகளை வாரித் தெளித்து செய்யும் விவசாயத்திலேயே மகசூல் காண முடியாத இக்காலத்தில் வெறும் இலை, தழை கழிவுகளைக் கொண்டு இயற்கை விவசாயம் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்பது ஆச்சர்யமான செய்தி தான்.
ஆமாம் அது இருக்கட்டும் இதெல்லாம் நாங்க எங்கே சென்று கற்றுக்கொண்டோம் என்று நீங்கள் வினவுவது புரிகின்றது. வேறு எங்கு கடவூரில் வானகம் என்றொரு பயிற்சி நிலையம் வைத்து இயற்கை விவசாயம் பற்றியும், ஆரோக்கிய வாழ்விற்க்கான இயற்கை உணவுகளை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பது மட்டுமல்லாமல் தானும் அவ்வழியே வாழ்ந்தும் வரும் நம்மாழ்வாரிடம் தான்..!!
ஐயா பற்றியும், வானகம் பற்றியும், அத்தகைய மாமனிதருக்கு மிக அருகில் இருந்த அனுபவம் பற்றியும் அறிய ஆவலா..?
நாளை
பார்க்கலாம்…!!!
நம்மாழ்வார் இயற்கை தந்தை!!!!!
ReplyDelete