வாழ்வியல்....!!!
இயற்கை விவசாயம் என்பது நம் வாழ்வியல் முறை. சுய சார்பற்ற வாழ்க்கை வாழ இயற்கை விவசாயம் ஒன்றே வழியாகும். மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, பாதுகாப்பான வீடு ஆகிய அனைத்தும் இயற்கை விவசாயம் மூலம் அடையலாம். இவை மட்டுமல்லாமல் இன்றைய முக்கிய தேவையான காகிதத்தால் ஆன பணமும் சாத்தியமே.
இத்தகைய முறையை நாம் ஏன் பின்பற்றுவதில்லை? இந்த கேள்விக்கு விடை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நிச்சயம் வானகத்தில் கிடைக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், எல்லா கவலைகளையும் மறந்து ஐந்து நாள் வானகம் எனும் சொர்கத்தில் பயிற்சி பெறுவது மட்டுமே.
இயற்கை வேளாண்மை என்றதும் விவசாயகள் மட்டுமே பங்குபெறும் ஒரு பயிற்சி கூடமாக இருக்கும் என்று சென்றிருந்த எங்களுக்கு மிஞ்சியது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் தான்.
கணினித் துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்து கிட்டதட்ட ஆஸ்திரேலியாவில் குடியுரிமை கிடைக்கும் சமயத்தில் தனக்கு இத்தகைய வேலை தேவை இல்லை என்று கூறி விட்டு இயற்கை விவசாயத்தை மட்டுமே நம்பி குடும்பத்துடன் இந்தியாவிற்கு திரும்பியுள்ள ஒரு நண்பர்.
இதே போல் கணினித் துறையில் பணிக்கு சேர்ந்த மூன்றே நாட்களில் இயற்கை விவசாயம் தான் இறுதி வரை நம்மை காக்கும் என்பதை அறிந்து பணியை விட்டு விட்டு வந்த ஒரு நண்பர்.
குடும்பத்தில் பல எதிர்ப்புகள் இருந்தபோதும் அத்தனையும் தாண்டி மனிதகுலம் தழைக்க விவசாயம் ஒன்றே அத்தியாவசியம் என்பதை உணர்ந்து களத்தில் இறங்கிய ஒரு நண்பர்.
இவ்வாறு பலதரப்பட்ட மக்கள் பயிற்சியில் எங்களுடன் இருந்ததால், எங்களுக்கு ஏற்பட்ட பல ஐயங்களை எளிதில் விளக்கிக் கொள்ள முடிந்தது. மேலும் எங்கள் அனைவருக்கும் ஒத்த மனநிலை இருந்ததால் எங்களால் எளிதில் நெருங்கி பழக முடிந்தது. இந்த உறவு எங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் நிலைக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
பசுமை புரட்சி பற்றி ஏற்கனவே நான் பதிவு செய்து இருப்பதால் தற்சமயம் அதை பற்றி விளக்க வேண்டிய அவசியம் இராது என எண்ணுகிறேன். அந்த பசுமை புரட்சியினால் ஏற்பட்ட சீர்கேடுகள் அனைத்தையும் சீர்செய்ய நம்மிடம் தற்சமயம் இருக்கும் ஒரே ஆயுதம் இயற்கை விவசாயம் மட்டுமே என்பதை மக்கள் அனைவரும் உணர வேண்டும்.
நாளை சித்த மருத்துவம் பற்றி முத்துசெல்வி அம்மாவின் சில கருத்துக்கள்.
Comments
Post a Comment