ஏதுமில்லை..!!
நீ செய்வதனைத்தும் எனக்கென அறிந்தும்
ஏற்றுக் கொள்ள
மறுக்கிறேன்
உண்மையை அல்ல,
உன்னை…!!
அன்றொரு நாள்
நீ அறிமுகமானபோதே
ஆழ்மனதில் ஏதோ
அபாயமணி ஒலித்தது..!!
கண்டதும் காதலென
நீ சொன்னாலும்
கண்டதை காதலென
ஏற்க மனமில்லை..!!
நாள்முழுதும் உன்னுடன் நானிருந்தாலும்
நெருக்கமாய் ஒருபோதும் உணர்ந்ததில்லை..!!
நீ என்னுடன் இருக்கின்ற நேரம்
சிறப்பாய் கழிந்தாலும்
பிரிந்திடும் நேரம்
என்னுள் மாற்றம் ஏதுமில்லை
உன் கண்ணீரை
துடைக்க அருகிருந்தாலும்
அதைக் கண்டு
நான் கண்ணீர் சிந்தியதில்லை..!!
உன் குரல்
கேட்டு அதிர்ந்தெழுந்ததில்லை
உன் விழிகண்டு மதி கெட்டதில்லை..!!
நீ இல்லாத
கணம் உன் நினைவுடன் இருந்ததில்லை
நீ என்னுடன் இருக்கின்றபோதும்,
என் நினைவுகள் உன்மீது மட்டுமே
இருந்ததில்லை..!!
கனவில் உன்னை
கண்டதில்லை !
நிஜத்தில் உன்னை
இரசித்ததில்லை !
உன் பிரிவில் நான் ஏங்கியதில்லை
!
நீ இல்லாத
நேரம் நான் வாடியதில்லை..!!
உன்னை நான்
ஏற்கவுமில்லை, வெறுக்கவுமில்லை..!!
ஏதுமில்லை என்றபோதும்
ஏதோ ஒன்று
உன்னிடம் உண்டு – என்னை
ஏதுமில்லை என்று
சொல்லியேனும்
உன்னை பற்றி
நினைக்க வைக்க..!!
Comments
Post a Comment