தொலைதூரக் காதல்..!
கடற்கரையோரம் நான் செல்லும் நேரம்,
கண்ணுக்கெட்டா தூரத்தில் ஒரு சிறு ஒளியில்,
ஒரு நொடி என்விழி உறுத்து விழிக்கும் போதும்,
ஒதுங்கி நிற்கும் இருவரின், வரிவடிவம் மறையும்போதும்,
பூக்காரி ஒருத்தி நெருங்கி வந்து விலகும்போதும்,
விற்பனையாளர்கள் என்னை தாண்டி நடக்கும்போதும்,
கடலலை சீற்றமின்றி சீண்டிச்செல்லும்போதும்,
தென்றல் சுகமாய் தீண்டிச்செல்லும்போதும்,
திரும்பும் வழியெல்லாம் அமைதி தொடரும்போதும்,
நல்லதாய் ஒரு பதார்த்தம் நான் சமைக்கும்போதும்,
உன் அழைப்பொலி என் பாடல்வரிசை பாடும்போதும்,
அருகிருக்கும் காதலர்கள் குறுஞ்செய்தி பரிமாறும்போதும்,
அடுத்த வீட்டு குழந்தை ஆளில்லா நேரம் பார்த்து,
என் கரடி பொம்மையை கட்டிப்பிடிக்கும்போதும்,
அது நீ குடுத்ததென்ற ஒரே காரணத்துக்காக,
பிடுங்கிய பொம்மையை ஒரு நொடி ஏந்தும்போதும்,
உடை தேடி ஒரு மணி நேரம் அலசி ஆராய்ந்து,
உனக்கு பிடித்ததை வாரத்தில் இருமுறை அணியும்போதும்,
தொலைக்காட்சி விளம்பரத்தில் உன் பெயர் கேட்டு,
என் தங்கை என்னை நோக்கி குறும்பாய் சிரிக்கும் போதும்,
உனக்கு பிடித்த கடையோராம் நின்று திரும்பும்போதும்,
நீலநிற சட்டையை துவைத்து மடிக்கும்போதும்,
கண்ணில் மையிட்டு கண்ணாடி காணும்போதும்,.
பிடித்த உடையில் புகைப்படம் எடுக்கும்போதும்,
என் சிறு தொந்தியை தடவி பார்க்கும்போதும்,
கட்டை முடியை அலைந்து ரசிக்கும்போதும்,
நீ குடுத்த கைக்கடிகாரத்தில் மணி பார்க்கும்போதும்,
உன்னோடு அளவளாவ நள்ளிரவு வரை விழித்திருக்கும்போதும்,
உன் மணம் வீசும் என் தலையணை அணைக்கும்போதும்,
என் மனம் உன்னை எண்ணி ஏங்கும்போதும்,
மறந்தே போகிறேன் நான்,
மாதம் இரு நாள் மட்டுமே உன் அண்மை எனக்கென்று..!
Super ma
ReplyDelete