நாணம்.!
அடிக்கொரு தரம் ஆனந்த கூச்சலிட,
அடிமனந்தொட்டு ஆர்ப்பரிக்கும் ஆசைகளை,
அடக்கி ஆளவே அரும்பாடு படும்போது,
அதரம் சிந்தும் அமுதை, மறைக்கவும் தோன்றுமோ?
இதுநாள் வரை கட்டியணைத்தும் தோன்றா கூச்சம்,
இன்று ஒரு பார்வையில் சிலிர்க்க செய்வதேனோ?
ஏனென்று வினவும் உன்னிடம் என்னதான் கூறுவது,
உணவின் உறைப்பென்று இதழ் குவிக்கிறேன் நான்.!
மணிக்கொருமுறை உனக்கு செய்தி அனுப்பி,
உன் கேள்விக்குறி பதிலுக்கு,
விடை தேடிக்கொண்டிருக்கிறேன்,
தேடலின் முடிவில் சிரிப்பொன்றை செய்தியாக்குகிறேன்.!
அலைபேசி டிங்டாங் உன் குறுஞ்செய்தியாகில்,
மௌனமாய் சிரித்து, இருநொடி காக்கவைக்கிறேன்,
ஏனோ உன் சலிப்புகள் என்னை பாதிக்கவில்லை,
மாறாய், சிரிப்போன்றே பதிலாகிறது.!
நாணம் கொண்டு நானும் சிவப்பேனென்று,
இன்று தான் கண்டுகொண்டேன்,
உன் பேர் எங்கோ ஒலிக்கக் கேட்டு,
ஒரு நொடி நானும் தயங்கி நின்று கவனித்த போது.!
தூரத்து காதல் தொல்லையாய் தோன்றுவதில்லை,
உன் நெருக்கங்கள் இயல்பாய் இருப்பதில்லை,
இப்போது, நாணம் என்னுள் சொல்லாய் மட்டுமில்லை,
என்னில் கலந்த உன்னை குறிக்கும் மொழியாகி போனது.!
Comments
Post a Comment